திமுகவுக்கு ஏற்றம் தருமா திருச்சியின் சக்சஸ் “பார்முலா”? சிறுகனூரில் இன்று நடக்கிறது இண்டியா கூட்டணி பொதுக்கூட்டம் – (படங்கள் )
தேர்தல் என்று வந்துவிட்டால் திருச்சி தவிர்க்க முடியாத இடமாக அரசியல் கட்சியினர் இடையே மாறிவிட்டது.ஏனெனில் திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கினால் தங்கள் கட்சி வெற்றியடையும் என அரசியல் கட்சியினர் நினைப்பதே அதற்கு காரணம். இதன் காரணமாகவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியிலிருந்து பிள்ளையார்சுழி போட்டு தொடங்க நினைக்கின்றனர் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அந்தவகையில் இன்று திருச்சி அருகேயுள்ள சிறுகனூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இண்டியா கூட்டணி சார்பில், திருச்சி மற்றும் பெரம்பலூரில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்குகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு திருச்சி சிறுகனூரில் இருந்து தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தொடங்கிய நிலையில் அது திமுக அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று ஆளும் கட்சியாக மாறியது. அந்தவகையில் தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் அதே சிறுகனூரில் இருந்தே தொடங்க உள்ளார். இதற்காக திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் சிறுகனூரில் 20 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.இதற்காக சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் அமரும் வரையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்- அமைச்சருமான முக ஸ்டாலின் கலந்து கொண்டு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு, திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றுகிறார். கூட்டத்திற்கு திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை தாங்குகிறார். திமுக மாவட்ட செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன், வைரமணி, செல்லப்பாண்டியன், ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்
கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
கூட்டத்தில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.மேலும் கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரகுபதி சிவசங்கர் மெய்யநாதன் மற்றும் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, எம்பிக்கள் திருச்சி சிவா,அப்துல்லா மற்றும் எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
உற்சாக வரவேற்புக்கு ஏற்பாடு
இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்காக சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் இன்று மாலை 4.45 மணிக்கு திருச்சிக்கு வருகிறார். அவருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். பின்பு அவர் காரில் சிறுகனூருக்கு செல்கிறார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பெரம்பலூர், திருச்சி பாராளுமன்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்வதை தொடர்ந்து நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
20 நாட்கள் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்
திருச்சி பொதுக் கூட்டம் முடிந்த பிறகு கார் மூலமாக தஞ்சாவூருக்கு இரவு செல்கிறார். பின்னர் தஞ்சை, நாகை தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நாளை 23ந்தேதி (சனிக்கிழமை) பிரசாரம் செய்கிறார். பிறகு தொடர்ச்சியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல், கரூர்,வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, மதுரை, சிவகங்கை,தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருவள்ளூர், வடசென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அடுத்த மாதம் ஏப்ரல் 17-ந்தேதி வரை பிரச்சாரம் செய்து தென்சென்னையில் மத்திய சென்னை வேட்பாளரை ஆதரித்து இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மொத்தம் 20 நாட்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.