யுபிஎஸ்சி முதன்மைத் தேர்விற்கு தகுதிப் பெற்றவர்கள் ரூ.25,000 ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்… தமிழ்நாடு அரசு அறிவிப்பு !
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உள்ளிட்ட உயரிய பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய யுபிஎஸ்சி மூலம் சிவில் சர்வீஸ் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து அதிகம் இளைஞர்கள் தேர்வாகுவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் மூலம் இலவச பயிற்சிகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஏழை, எளிய பின்புலத்தில் இருந்து வரும் இளைஞர்கள் இலவசமாக பயிற்சி பெரும் வகையிலும், அந்த பயிற்சி காலத்தில் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மூலம் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் என்பது முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் முதல்நிலைத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500, அதில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்விற்கு தகுதிப் பெறுபவர்களுக்கு ரூ.25,000 மற்றும் நேர்முகத் தேர்விற்கு செல்பவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது. அந்தவகையில், 2026-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்விற்கு தகுதிப் பெற்றவர்கள் ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் அறிவித்துள்ளது. இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2026) யுபிஎஸ்சி குடிமைப்பணி / இந்திய வனப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி சேர்ந்த மாணவர்கள், ஆன்லைன் மூலம் (https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/) 19.06.2026 முதல் 30.06.2026 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.