தமிழ்நாடு அரசியல் களம் தற்போது சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுழன்று வருகின்றன. இந்தச்சூழலில், தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க.வின் வலுவான முகமான பொன்முடி, 1989-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 8 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டவர். தற்போது திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் அவர், இந்த முறை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கவில்லை. மாறாக, அவரது மகன் கௌதம சிகாமணி போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். இந்த தேர்தலில் பொன்முடி போட்டியிடாதது குறித்து பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசிய விவகாரத்தில் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதுடன், கட்சிப் பதவியும் பறிக்கப்பட்டது. மேலும், மூத்த நிர்வாகிகள் இளைஞர்களுக்கு வழி விடுமாறு கேட்டுக் கொண்டதன்பேரில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதன்மூலம் தனது அரசியல் வாரிசுக்கு வழிவிடும் நோக்கில் பொன்முடி இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனப் பார்க்கப்படுகிறது.

Comments are closed.