Rock Fort Times
Online News

தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும்? * முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே..!

தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும்? என்பது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வருகிற நவம்பர் 8-ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த சூழலில், தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு இம்மாதம் செப்டம்பர் 6- ம் தேதி முதல் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, தீபாவளிக்கு முந்தைய வியாழக்கிழமையான நவம்பர் 5- ஆம் தேதி ரயிலில் பயணிக்க விரும்புவோர், செப்டம்பர் 6- ம் தேதியும், நவம்பர் 6- ம் தேதி வெள்ளிக்கிழமை ரயில் பயணம் செய்ய விரும்புவோர், செப்டம்பர் 7- ம் தேதியும், நவம்பர் 7- ம் தேதி சனிக்கிழமை ரயில் பயணம் மேற்கொள்வோர், செப்டம்பர் 8- ம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

அதேபோல், தீபாவளி திருநாள் அன்று அதாவது நவம்பர் 8-ம் தேதி ரயில் பயணம் மேற்கொள்வோர், செப்டம்பர் 9- ம் தேதியும் டிக்கெட் முன்பதிவுச் செய்துக் கொள்ளலாம். ரயில் டிக்கெட் முன்பதிவுகள் செப்டம்பர் 6-ம் தேதி முதல் நாள்தோறும் காலை 8 மணிக்கு தொடங்கும். பயணிகள் இந்திய ரயில்வேயின்  irctc.co.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்களிலோ தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவுச் செய்து கொள்ளலாம். எனினும், இந்த டிக்கெட் முன்பதிவு வழக்கமாக இயக்கப்பட்டு வரும் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும். ரயில்வே விதிகளின்படி பயணம் மேற்கொள்வதற்கு 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெளியூரில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியைக் கொண்டாட ஏதுவாக வரும் நாட்களில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரயில்களையும், அதற்கான டிக்கெட் முன்பதிவு தேதியையும் தெற்கு ரயில்வே அறிவிக்கவுள்ளது. டிக்கெட் முன்பதிவு தொடர்பான உதவிக்கு 24*7 இயங்கும் 139 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்கலாம் என்று தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்