திருச்சி மாவட்டம் குழுமணி அருகேயுள்ள கோப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (28). இவர் மீது திருச்சி மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால், 2 நாட்களை கடந்த பிறகும் அவரை எங்கு வைத்துள்ளனர்?, அவரது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ஹேமா மற்றும் உறவினர்கள் காவல் நிலையங்களில் விசாரித்தும் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதனையடுத்து உறவினர்கள் உள்ளிட்ட சுமார் 50 பேர், திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள மாவட்ட கலெக்டரின் பங்களாவை நேற்று இரவு முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கே.கே.நகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து மேலதிகாரிகளுக்கு தெரிவித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.இந்த முற்றுகை போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Comments are closed.