மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதியில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்னென்ன?- * பா.ஜ.க. தேசிய இணை பொறுப்பாளர் பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி கேள்வி!
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பாரதிய ஜனதா கட்சி தேசிய இணை பொறுப்பாளரும், ஆந்திர முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று (மார்ச் 22) திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், முதல்வர்கள், ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக தவறான தகவல்களை உருவாக்குகிறார்கள். ஓட்டுக்காக திமுக அரசு, தவறான தகவல்களை பரப்பி வருகிறது. தமிழ்நாட்டில் கொலை ,கொள்ளை, பாலியல் வன்கொடுமை, மணல் கொள்ளை, ஊழல் என்று தொடர்ந்து நடந்து வருகிறது. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு ஊழல் புகாரில் சிக்கி வருகிறார்கள். ஊழல் புகாரில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்தவருக்கு அமைச்சர் பதவி வழங்கி உள்ளது, திமுக அரசு. மேலும், திமுக நிர்வாகிகள் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்கள்.
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு மக்களை திசை திருப்பும் நோக்கில் புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு என்று பல்வேறு பொய்யான பிரச்சாரங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் செய்து வருகிறார்கள். மத்திய அரசின் நிதி மூலம் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. திமுக அரசு மக்களிடம் வாக்கு பெறுவதற்காக மத்திய அரசை தொடர்ந்து குறை கூறி வருகிறது. தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் வளர்ச்சி அடையாமல் தோல்வி அடைந்துள்ளது. அதன் வரிசையில் தற்போது தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது. தோல்வி அடைந்த மாநிலங்களின் முதல்வர்கள் இன்று ஒன்று கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றலிதிலிருந்து இதுவரை எத்தனை திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார்கள். எத்தனை திட்டங்கள் நிலுவையில் உள்ளது. மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்னென்ன? என அனைத்தையும் வெள்ளை அறிக்கையாக கொடுக்க தயாரா?. வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து மேலிடம் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.