தண்ணீருக்கும், தாருக்கும் ஒத்துப்போகாது, மழை நின்றபிறகு சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு…!
திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு திருச்சியில் இன்று(21-11-2024) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 15 ஆண்டு காலமாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை. வரியை ஒரேடியாக உயர்த்தினால் மக்கள் கஷ்டப்படுவார்கள் என்ற காரணத்தினால் நகராட்சி துறை புதிய வழிமுறையை கண்டறிந்தது. 600 சதுர அடிக்கு கீழ் உள்ள மனைக்கு சொத்து வரி இல்லை. 600 முதல் 1200 சதுர அடி வரையிலான மனைகளுக்கு 25% முதல் 35% வரையும், 1600 முதல் 1800 சதுர அடி வரை 50% வரியும் 1800 முதல் 2000 வரை 70 முதல் 75 சதவீதம் எனவும், வசதி படைத்தவர்களுக்கு 100% வரையும் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு 6 சதவீதம் வரி உயர்த்தலாம் என சட்டம் கூறுகிறது. மழை போன்ற பேரிடர் காலங்களில் 6% சொத்து வரியை நிறுத்தி வைப்பது நடைமுறையில் உள்ளது. முதல்வரின் உத்தரவின்பேரில் இது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாருக்கு எவ்வளவு சதவீதம் வரி என்று மாநகராட்சியிடம் தெளிவான பட்டியல் உள்ளது. மின்சார வாரியத்திடம் உள்ள பட்டியல் குறித்து எனக்கு தெரியாது.
வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. வசதியற்றவர்களுக்கு சொத்து வரி உயர்த்தப்பட வில்லை.
மழை காரணமாக சாலைகள் சேதம் அடைந்துள்ளது. தண்ணீருக்கும், தாருக்கும் ஒத்துப்போகாது என்பது அனைவரும் அறிந்த செய்தி. எனவே, மழை நின்ற பிறகு சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும். சேதமடைந்த சாலைகளை பழுது பார்க்க முதல்வர் ஸ்டாலின் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கோவை, ஆவடியை தொடர்ந்து திருச்சியிலும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பகுதிகளுக்கு மீட்டர் பொருத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. அதேபோன்று நீர் எடுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் மீட்டர் பொருத்தப்படுகிறது, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நல்ல நிலைமையில் தான் உள்ளது. எதிர்க்கட்சிகள் கூறுவது போல் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடவில்லை. எதிர்க்கட்சிகள் வர உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இது போன்ற கருத்துக்களை கூறி வருகின்றனர். திருச்சி பஞ்சப்பூரில் அமைந்து வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை ஜனவரி பொங்கலுக்கு முன்பாக திறக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வீடு கட்டுவதாக அனுமதி பெறப்பட்டு தற்போது அவை வணிக வளாகங்களாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அதுபோல இருந்தால் எங்கள் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். வரி கூடுதலாக விதிக்க முடியும் என்றார். பேட்டியின்போது திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.