Rock Fort Times
Online News

பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்டத் திருத்த மசோதா…* பெரும் அமளிக்கிடையே மக்களவையில் தாக்கல்..!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்த சூழலில், இனிவரும் காலங்களில் தேர்வு முறைகேடு நடக்காமல் தடுக்கும் விதமாக சட்டத்திருத்தத்தை மத்திய அரசு முன் மொழிந்துள்ளது. மக்களவை பிற்பகல் 12 மணிக்கு கூடியவுடன், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான தாக்குதல் மற்றும் வழக்குப்பதிவுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும், பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார்.

தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான சட்டத்தை மேலும் கடுமையாக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய சட்டத்திருத்தத்தின்படி, ஒழுங்கமைக்கப்பட்ட வினாத்தாள் கசிவு குற்றங்களுக்கான குறைந்தபட்ச சிறைத் தண்டனை 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாகவும், குறைந்தபட்ச அபராதம் ₹1 கோடியில் இருந்து ₹10 கோடியாகவும் உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், தனிநபர்கள் மேற்கொள்ளும் தேர்வு முறைகேடுகளுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ₹50 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.மேலும், வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைந்து முடிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது, விசாரணையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்வது, தேர்வு நடத்தும் நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட புதிய அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.இந்த சட்டத்திருத்தம், போட்டித் தேர்வுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்தி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்