Rock Fort Times
Online News

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு…!

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தபோது, கிரானைட் முறைகேட்டை விசாரிக்க தன்னை ஆணையராக உயர்நீதிமன்றம் நியமித்தது. விசாரணையில், சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் அரசுக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் எனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு, 2023-ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால், கிரானைட் முறைகேடு வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள தன்னால், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலவில்லை, அச்சுறுத்தல்கள் தொடர்வதால் மீண்டும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு இன்று(27-07-2026) விசாரணைக்கு வந்தது. சகாயம் தரப்பு மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகளில் சாட்சியம் அளிப்பதற்காக செல்லும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு, குறைந்தது ஒரு துப்பாக்கி ஏந்திய காவலருடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்