தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.23) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு மே 4-ந்தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்தநிலையில் தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை பார்வையிட 10 நாடுகளை சேர்ந்த 20 பேர் கொண்ட சர்வதேச குழு ஒன்று சென்னைக்கு வருகை தந்துள்ளது. அவர்களுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் 3 பிரதிநிதிகளும் சேர்ந்து, நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை எடுத்துக் கூறினர். பின்னர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதிக்குட்பட்ட என்.கே.டி. நேஷனல் பெண்கள் உயர்நிலை பள்ளிக்கு அவர்கள் அனைவரும் சென்றனர். அப்போது கோடை வெயிலை தணிக்கும் வகையில், அவர்களுக்கு இளநீர் கொடுக்கப்பட்டது. ‘என்னுடைய வாக்கு என்னுடைய உரிமை’ என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பற்றி அவர்கள் கேட்டறிந்தனர். இதில் உள்ள நடைமுறைகள், பின்பற்றப்படும் விதிகள் ஆகியவற்றை நன்கு தெரிந்து கொண்டு தங்கள் நாட்டுக்கு செல்ல உள்ளனர்.

Comments are closed.