திருச்சி மாவட்டத்தில் இன்று(27-10-2023) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள
9 சட்டமன்ற தொகுதிகளில் 22 லட்சத்து 63 ஆயிரத்து 169 வாக்காளர்கள் உள்ளனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், இந்தப் பட்டியலானது மாவட்டம் முழுவதும் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் (கோட்டாட்சியர் அலுவலகம்), உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் (வட்டாட்சியர் அலுவலகம்), வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை பொதுமக்கள் பார்வையிட்டு சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம். புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், தொகுதி மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துக்கும் அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்து திருத்தம் செய்து கொள்ளலாம். திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிப்போர் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். இம்மாதம் 27ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 9ம் தேதி வரை திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம். மேலும், நவம்பர் மாதம் 4, 5, 18,19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாம்களிலும் பொதுமக்கள் திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவித்தார்.தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 9 தொகுதிகளிலும் சேர்த்து ஆண்கள்- 10,98,759, பெண்கள்- 11,64,081 மூன்றாம் பாலினம்- 329 என மொத்தம் 22 லட்சத்து 63 ஆயிரத்து 169 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட போது திமுக சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், இளங்கோ, அதிமுக அவைத்தலைவர் அய்யப்பன், பகுதி செயலாளர் அன்பழகன், ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்குமார், ராவணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ரெக்ஸ் , கலை, ஓ.பி.எஸ்.அணி சார்பில் சுதாகர், சந்திரன், தாயார் சீனிவாசன், ராஜா முகம்மது, கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் சுரேஷ், வெற்றிச்செல்வன் மற்றும் பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.