Rock Fort Times
Online News

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 700 பேர் மீது திருச்சி போலீசார் வழக்கு பதிவு

தேசிய ஜனநாயக கூட்டணியில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக செந்தில்நாதன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இரவு 7 மணிக்கு தென்னூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் இரவு 10:10 மணிக்கு தான் அந்த பகுதிக்கு வந்தடைந்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அரசியல் கட்சியினர் இரவு 10 மணி வரை தான் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறையில் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக அண்ணாமலை பேசாமல் வாக்கு சேகரித்து செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சரியாக 10:12 மணிக்கு அவர் பேசத் தொடங்கி, 10:20 மணி வரை பேசினார். 10:20 மணியளவில் இன்னும் ஒரு நிமிடம் தான் இருக்கிறது என அவர் கூறி தன்னுடைய பேச்சை நிறைவு செய்தார். அவர் பேச்சில்., தமிழகத்தை ஆளும் திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் 520 தேர்தல் வாக்குறுதிகள் அளித்தார்கள். அதில் இதுவரை 20 வாக்குறுதிகள் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை.

மீண்டும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக ஆட்சியைப் பிடிப்பார். நீங்கள் இந்த 20நாள் திருச்சி வேட்பாளருக்காக உழைத்தால் நம்முடைய வேட்பாளர் செந்தில்நாதன் நமக்காக 5 வருடம் உழைப்பார். திமுகவிற்கு போடும் ஒவ்வொரு வாக்கும் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே உங்களுடைய வாக்குகளை கூட்டணி கட்சியில் இருக்கக்கூடிய செந்தில் நாதனுக்கு பிரஷர் குக்கர் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தன்னுடைய உரையை நிறைவு செய்தார். தேர்தல் பிரச்சாரத்தை 10 மணிக்கு நிறைவு செய்ய வேண்டும் என சாமானிய மக்களுக்கும் நன்கு தெரியும். ஆனால் ஐபிஎஸ் படித்து பணியில் இருந்த ஒருவர் தேர்தல் விதிமுறைகளை மீறி இந்த பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினார். மேலும் 10 மணிக்கு அங்கிருந்த ஒலி பெருக்கிகள் அணைக்கப்பட்டது. ஆனால் அண்ணாமலை வரும் நேரத்தில் மேளதாளங்கள் அடித்தும் வான வேடிக்கைகள் வெடித்தும் அவர் வரவேற்கப்பட்டார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி சட்ட விரோதமாக ஒன்று கூடி தேர்தல் பரப்புரை செய்தல், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பாஜக அண்ணாமலை உள்ளிட்ட 700 பேர் மீது திருச்சி,தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதிதாக கட்சி தொடங்கியவர் திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்- விஜயை சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 of 900

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்