திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வேங்கூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை (34). கடந்த, 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
ஒரு வாரத்திற்கு பிறகு கிருஷ்ண சமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலின் கரையில் தங்கதுரையின் உடல் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த, அப்போதைய திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் மதன், போலீஸார் தங்கதுரை உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தங்கதுரையின் செல்போனை கிருஷ்ண சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த, அவரது நண்பரான சப்பாணி (35) என்பவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவாிடம் விசாரித்தபோது, நகைக்கு ஆசைப்பட்டு தங்கதுரையைக் கொலை செய்ததாக சப்பாணி ஒப்புக்கொண்டார். இதுபோலவே, நகைக்காக தன் தந்தை தேக்கன் (75), திருவெறும்பூர் மேல குமரேசபுரத்தைச் சேர்ந்த கோகிலா (70), பாப்பாக்குறிச்சியைச் சேர்ந்த அற்புதசாமி (70), கீழ குமரேசபுரத்தைச் சேர்ந்த விஜய் விக்டர் (27), கூத்தப்பாரைச் சேர்ந்த சத்தியநாதன் (45), பெரியசாமி (75), வடகாடு விஸ்வம்பாள், சமுத்திரத்தைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர் குமரேசன் (50) ஆகிய, 7 பேரையும் கொலை செய்ததாக சப்பாணி வாக்குமூலம் அளித்தார். அதையடுத்து, சப்பாணியை கைது செய்த போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த விசாரணைக்காக, திருச்சி மத்திய சிறையில் இருந்து சப்பாணி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அதனால் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, வழக்கை வரும் ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கில், வழக்கறிஞர்கள் விவாதங்கள் நிறைவுற்ற நிலையில், ஆகஸ்ட் 7ம் தேதி் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.