தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், விவசாய பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி திமுக சார்பில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் நேற்று (03.08.2026) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து தனிப்பட்ட முறையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, தவெக நிர்வாகிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீசார், 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உதயநிதி தரப்பில் வாதிடுகையில், “பெண்ணின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் பேசவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அரசுத் தரப்பில், “உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை. விசாரணைக்காகவே அழைத்துச் செல்லப்படுகிறார். விசாரணைக்குப் பின் விடுவிக்கப்படுவார்” எனத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, “காவல்துறை விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். கைது செய்யப்பட்ட உதயநிதியை காவல் நிலைய பிணையில் இன்றே விடுவிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

Comments are closed.