திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் 2 ரயில்வே மேம்பாலங்கள் உள்ளன. இதில், ஒரு பாலத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால், அந்த ஒரு பாலத்தின் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மற்றொரு பாலத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டன. வாகன பெருக்கத்தால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அந்த பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
இந்நிலையில், பழுதடைந்த ரயில்வே மேம்பாலத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. அமைச்சர்கள், கலெக்டர், ரயில்வே அதிகாரிகள், ஐஐடி வல்லுனர் குழுவினர் அவ்வப்போது பாலத்தை பார்வையிட்டு தகுந்த ஆலோசனை கூறினர். இந்த நிலையில் பழுதடைந்த பாலத்தை நெடுஞ்சாலை ஆணையம் முழுமையாக சீரமைத்தது. இதனை தொடர்ந்து சென்னை ஐஐடி பேராசிரியர் அழகுசுந்தரம் தலைமையிலான வல்லுநர் குழுவினர் பாலத்தில் நிறைவடைந்த பணிகள் மற்றும் உறுதித் தன்மையை ஆய்வு செய்தனர். பாலத்தின் கீழ்பகுதியில் ஒரு சென்சார் கருவி பொருத்தப்பட்டு பாலத்தின் மேல்பகுதியில் 30 டன் பொருட்களுடன் கொண்ட ஒரு லாரியை இரவு முழுவதும் நிறுத்தி ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு முடிவில் பாலத்தின் உறுதித்தன்மை ஸ்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று(12-03-2024) தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து பாலத்தில் அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா தனக்கோடி, மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார் மற்றும் கோட்டத் தலைவர் மதிவாணன் , ஜெய நிர்மலா, காவல் துணை ஆணையர்கள் அன்பு, செல்வகுமார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாலம் திறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.