திருச்சி,என்.ஐ.டி மாணவியிடம் எலக்ட்ரீசியன் அத்துமீறல்..! கல்லூரி விடுதிமுன் போராட்டம் விடிய விடிய நீடித்ததால் திருவெறும்பூரில் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
திருச்சி,திருவெறும்பூர் அருகேயுள்ள என்.ஐ.டி கல்லூரி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுமார் 6000-க்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் என்ஐடி கல்லூரி மகளிர் விடுதியில் ஏற்பட்ட மின்சார கோளாறை சரி செய்ய அங்கு ஒப்பந்த பணியாளராக வேலை பார்ப்பவர் சென்றுள்ளார். அப்போது விடுதி அறையில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் அந்த எலக்ட்ரீசியன் அத்துமீறி நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, கூச்சலிட்டு வெளியே ஓடிவந்து சக மாணவிகளிடம் தெரிவித்தார். உடனே, இச்சம்பவம் குறித்து மாணவர்கள் திருவெறும்பூர் போலீசில் புகார் அளித்தனர். திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த எலக்ட்ரீசியனை அதிரடியாக கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கையும், விடுதி வார்டனின்பொறுப்பின்மையையும் கண்டித்து சக மாணவ – மாணவிகள் விடுதி முன் திரண்டு நேற்றிரவு முதல் அதிகாலை வரை போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் போராட்டம் நீடித்தது. இதனால் என்.ஐ.டி கல்லூரி வளாகத்திற்குள் பெரும் பரபரப்பு நிலவியது.

Comments are closed.