தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் அதிக கவனம் ஈர்க்கப்பட்ட தொகுதிகளில் திருச்சி தொகுதியும் ஒன்று. காரணம், திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ களம் காண்கிறார். அதிமுக சார்பில் கருப்பையாவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் செந்தில்நாதனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் நேற்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்தவகையில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு ரூ.35.90 கோடி மதிப்பிலான சொத்து, அதிமுக வேட்பாளருக்கு
ரூ.2.82 கோடி, அமமுக வேட்பாளருக்கு ரூ.8.18 கோடி சொத்து உள்ளதாக பிரமாண பத்திரத்தில் (அபிடவிட்) குறிப்பிட்டுள்ளனர்.
அதில் அவர்கள் குறிப்பிட்ட சொத்து விவரங்கள் வருமாறு:
மதிமுக வேட்பாளர்
கையிருப்பு ரொக்கம்: துரை வைகோ ரூ.2,05,000, மனைவி கீதா ரூ.5,02,000, மகன் வருண் ரூ.2,500, மகள் வானதி ரேணு 2,000. துரை வைகோ குடும்பத்தினர் பெயரில் அசையும் சொத்து ரூ.2.19 கோடி, அசையா சொத்து ரூ.33.72 கோடி என மொத்தம் ரூ.35.91 கோடி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடனாக ரூ.1.35 கோடி உள்ளது. ஒரு கார் உள்ளது. அசையும் சொத்தில் 2.07 கிலோ தங்க நகைகள், 6.38 வெள்ளி, ரூ.19 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் அடக்கம். துரை வைகோ மீது வழக்கு இல்லை.
அதிமுக வேட்பாளர்
அதிமுக வேட்பாளர் ப.கருப்பையா மனைவி விமலா, மகன் குருநாத் பன்னீர்செல்வம், மகள் மகிபாலாநானி ஆகியோருக்கு அசையும் சொத்தாக ரூ.2.52 கோடி, அசையா சொத்தாக ரூ.30.75 லட்சம் என மொத்தம் ரூ.2.83 கோடி உள்ளது. கருப்பையாவுக்கு ரேஞ்ச்ரோவர் உட்பட 3 கார்கள், 5 டிப்பர் லாரிகள் உள்ளன.
506 கிராம் தங்க நகைகள் உள்ளன. ரூ.3.07 கோடி கடன் உள்ளது. கருப்பையா பெயரில் கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
அமமுக வேட்பாளர்
அமமுக ப.செந்தில்நாதன், மனைவி மகேஸ்வரி, மகள்கள் பவித்ரா, யாழினி ஆகியோர் பெயரில் அசையும் சொத்தாக ரூ.88.31 லட்சம், அசையா சொத்தாக ரூ.7.30 கோடி என மொத்தம் ரூ.8.18 கோடி சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 1.100 கிலோ தங்கம் உள்ளது. ரூ.64.08 லட்சம் கடன் உள்ளது. 2 கார், ஒரு இருசக்கர வாகனம் உள்ளது. திருச்சி கோட்டை, தில்லைநகர் ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.