Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.12,883 கோடி கடன் வழங்க இலக்கு..

கலெக்டர் மா.பிரதீப்குமார் தகவல் ..

திருச்சி மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட மாவட்ட அனைத்து வங்கிகள் ஒருங்கிணைப்பு குழு மற்றும் திட்ட அறிக்கை வெளியிடும் கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்டத்துக்கான நடப்பு 2023-24 நிதியாண்டுக்கான திட்ட அறிக்கையை கலெக்டர் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்டு வங்கியுடன் இணைந்து 2023-24 நிதி ஆண்டுக்கான திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இத்திட்ட அறிக்கையில் பல்வேறு துறைகளில் வங்கிக் கடன்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில், விவசாயத்துறைக்கு ரூ.7,221.76 கோடி, குறு சிறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.2,513.59 கோடி, வீட்டுக்கடன்கள் ரூ.1,514 கோடி, கல்விக்கடன் ரூ.418.94 கோடி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்தி துறைக்கு ரூ. 88.10 கோடி, சமூக உள்கட்டமைப்பு துறைக்கு ரூ.203.97 கோடி மற்றும் இதர முன்னுரிமை கடன்கள் ரூ.882.50 கோடி என மொத்தம் ரூ.12,883.59 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வழங்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருச்சி முதுநிலை மண்டல மேலாளர்  டி. காமேஷ்வர ராவ் பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் கே.ரமேஷ்குமார், நபார்டு வங்கி மாவட்ட மேம்பாட்டு மேலாளர் என்.எம்.மோகன் கார்த்திக், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எம்.முருகேசன் மற்றும் முரளீதரன், ஐஓபி வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு , பயிற்சி மைய இயக்குநர் ஜெ.அகல்யா உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள், வங்கி அலுவலா்கள்  பங்கேற்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்