திருச்சி மாநகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு ஜங்ஷன் அருகே அரிஸ்டோ பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தின் வழியாக நான்கு முனைகளில் இருந்தும் திருச்சி மத்திய பஸ் நிலையத்தை அடைய முடியும். அதன் கீழ்பகுதியிலும் வாகனங்கள் செல்ல முடியும். இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்படாத நிலையில் மற்றொரு பகுதி மட்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இந்த நிலையில் ராணுவ அனுமதி பெற்று மற்ற மேம்பால பணியும் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மாதம் 29- ம் தேதி பாலம் திறக்கப்பட்டது. அந்த பாலம் மன்னார்புரம், திண்டுக்கல் சாலை, ஜங்சன், கிராப்பட்டி, மத்திய பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் ஒரு வழி பாதையாக தான் இருந்து வருகிறது. அதனை இருவழிப் பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஒத்திகை இன்று ( 27.06.2023 ) நடைபெற்றது. இதனை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எம்.சத்திய பிரியா ஐபிஎஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த பாலத்தின் 2 வழித்தடங்களில் மட்டும் போக்குவரத்தை அனுமதிக்க ஆய்வு செய்து வருகிறோம். இன்னும் சில நாளில் இது இருவழிப்பாதையாக மாற்றப்படும். சிறிய ரக வாகனங்கள் மட்டும் இருவழிப் பாதையில் அனுமதிக்கப்படும்.
திருச்சி மாநகரில் 1,500 சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமராக்கள் சரியாக இயங்குகிறதா என கண்காணித்து வருகிறோம். கூடுதலாக கேமராக்கள் அமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் தொடர்புடைய 29 குற்றவாளிகளுக்கு சரித்திர பதிவேடு திறக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இது தவிர கஞ்சா எங்கிருந்து வருகிறது, எப்படி விற்பனை செய்யப்படுகிறது என சில இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். அந்த இடங்களில் , கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.