திருச்சி அ.ம.மு.க. வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்-டிடிவி தினகரன்…!
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், செந்தில் நாதனை குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய கேட்டுக் கொள்கிறேன். மோடி பிரதமர் ஆவதற்கு திருச்சியில் செந்தில்நாதனை வெற்றி பெற செய்ய வேண்டும். ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் துணிச்சலாக தனி சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலுக்குப் பின்பு அதிமுக தொண்டர்கள் இணைந்து விடுவார்கள்.
எனக்கும் ஓபிஎஸ்.க்கும் பதவி ஆசை இல்லை. துரோகிகளிடம் இருக்கும் அதிமுகவை மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எங்களது எண்ணம். திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் ‘காசை மணல் போல் அள்ளி வீசுகிறார்’ என கேள்வி பட்டேன். பணத்திற்கு ஆசைப்பட்டு ஏமாந்தால் நாங்கள் பொறுப்பல்ல. திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கதறி அழுதார் மதிமுக வேட்பாளர் துரை வைகோ. திமுகவினர் அப்படித்தான் செய்வார்கள். பாஜகவில் தாமரை சின்னத்தில் நிற்க சொல்லி எந்த நிர்பந்தமும் இல்லை. தற்போது நானும் ஓபிஎஸ் -ம் தனி சின்னத்தில் தான் நிற்கிறோம். ஆனால் தற்போது யார் அந்த நிர்பந்தத்தில் இருக்கிறார் என உங்களுக்கு தெரியும். (துரை வைகோவை குறிப்பிடுகிறார்.). ஆகவே, வருகிற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். வாக்கு சேகரிப்பின் போது முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன், முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.