Rock Fort Times
Online News

பராமரிப்பு பணிகளால் திருச்சிக்கு தாமதமாக வந்த ரயில்கள்…

பயணிகள் முற்றுகை போராட்டம்..

திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஆங்காங்கே தண்டவாளம் மற்றும் சிக்னல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சில ரயில்கள் பாதி தூரம் மட்டும் இயக்கப்படும் எனவும், சில ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நின்று தாமதமாக புறப்பட்டுச் செல்லும் எனவும் ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், மயிலாடுதுறையிலிருந்து தஞ்சாவூர், திருச்சி, மதுரை வழியாக செங்கோட்டை வரை செல்லும் பயணிகள் விரைவு ரயில் திங்கள்கிழமை காலை சுமார் 11 மணிக்கு புறப்பட்டு பகல் 1.30 மணியளவில் திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு
பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் 30 நிமிடம் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 30 நிமிடம் கடந்த பிறகும் ரயில் அங்கிருந்து புறப்பட்டு செல்லவில்லை. இந்த ரயிலுக்கு பின்னர் வந்த குருவாயூர், சோழன் உள்ளிட்ட மேலும் இரு ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்ற செங்கோட்டை ரயில் சுமார் ஒன்றரை மணி நேரமாகியும் புறப்படாததால் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். இதில் விமானத்தை பிடிக்கச்செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். இதனையடுத்து பயணிகள் சிலர் ரயில் நிலைய மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை எடுத்துக் கூறினர். அதன்பிறகு பயணிகள் அமைதி அடைந்தனர். பின்னர் பிற்பகல் 3.15 மணிக்கு பிறகு ரயில்கள் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்