கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு மருத்துவக் கல்லூரியில் பிரக்ருதி ஷெட்டி (20) என்ற மாணவி விடுதியில் தங்கி மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பெரகாவி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நேற்று ( 13.11.2023 ) பிரக்ருதி ஷெட்டி திடீரென விடுதியின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரக்ருதி ஷெட்டி தங்கியிருந்த அறையில் சோதனையிட்டனர். அப்போது தற்கொலைக்கான காரணம் குறித்து பிரக்ருதி ஷெட்டி எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், தனது உடல் மிகவும் பருமனாக உள்ளது என்றும், உடல் எடையைக் குறைக்க கடுமையான பயிற்சி மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், எதுவும் பலன் அளிக்காமல், அடிக்கடி உடல்நலமும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, விரக்தி காரணமாக தற்கொலை முடிவை தேடிக்கொள்கிறேன், என்னை மன்னித்து விடுங்கள் என்று எழுதி இருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமன் பிரச்சினையால் மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவ-மாணவிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.