காவிரி டெல்டாவில் நாளை முழு அடைப்பு: திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும்…
மத்திய, வடக்கு மாவட்ட செயலாளர்கள் அறிக்கை..
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல். ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் உள்ள ஒரு சில அமைப்புகள் தி.மு.கவை விமர்சனம் செய்ததை கண்டித்தும், தமிழ் நாட்டுக்கு துரோகம் செய்யும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் சார்பில், காவிரி டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாத்திடவும் சம்பா சாகுபடி துவங்கிட ஏதுவாக காவிரியில் மாத வாரியாக வழங்கிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தியும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை 11-ந் தேதி (புதன்கிழமை) முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய, வடக்கு மாவட்டத்தில் முழு கடையடைப்பும் மற்றும் தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் மறியல் அறப்பேராட்டமும் நடைபெறவிருக்கிறது. இந்த முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தில் மத்திய, வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள், விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு டெல்டா மாவட்ட விவசாயிகளை பாதுகாத்திட வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.