த.வெ.க.எம்.எல்.ஏ விக்னேஷ் முயற்சியால் முசிறி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடங்கள்… ஆரம்ப கட்டப் பணிகள் ஜரூர்!
தமிழக வெற்றிக்கழக ஆட்சியால், அரசியலில் மட்டுமல்ல, திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியிலும் நிறைய மாற்றங்கள் நடைபெற ஆரம்பித்திருக்கின்றன. அதன் தொடக்கமாக முசிறி தாலுகா, அரசு மருத்துமனைக்கான கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தொகுதி மக்களிடையே மாற்றத்திற்கான மகிழ்ச்சி துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. இதுகுறித்து முசிறி த.வெ.க. எம்.எல்.ஏ விக்னேஷிடம் பேசினோம். அப்போது அவர் தெரிவித்ததாவது.,
“முசிறியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது.தொடக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்ட பிறகு, தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனாலும், மருத்துவமனைக்கான கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படாததால், பழைய பாழடைந்த பில்டிங்கில்தான் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. முசிறிக்கு அருகிலுள்ள தொட்டியம், காட்டுப்புத்தூர், தா.பேட்டை போன்ற பகுதிகளிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 1000க்கும் அதிகமானவர்கள் வெளி நோயாளிகளாக இங்கு வருகின்றனர். ஆனால் மருத்துமனையில் மொத்தமே வெறும் 56 படுக்கைகள் தான் இருக்கின்றன.
இதனால், அப்பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. ஆகவே, அரசு மருத்துவமனையின் தற்போதைய நிலை குறித்தும், செய்ய வேண்டிய அடிப்படை கட்டமைப்புகள் குறித்தும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் விரிவாக பேசினேன். இதன் பலனாக முசிறி தாலுகா மருத்துவமனைக்கான கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் அரசால் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனை வளாகத்திலேயே புதிய பில்டிங் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதித்துறையின் ஒப்புதல் கிடைத்தபிறகு முழுவீச்சில் மருத்துவமனை மேம்பாட்டுப்பணிகள் நடைபெறும். இதைப்போலவே முசிறி தொகுதி மக்களுக்கான ஆம்புலன்ஸ் வசதி, காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கான புதிய பில்டிங், தொகுதி விவசாயிகளின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான மேம்பாட்டு பணிகள் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.தொகுதி மக்களின் தேவைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பதற்கு என்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன் என்று கூறினார்.

Comments are closed.