Rock Fort Times
Online News

வெள்ளத்தில் காணாமல் போன இளைஞர்…. இரண்டு நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு!

அரபிக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த 16, 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. அதிலும், திருநெல்வேலி மாநகரமே வெள்ள நீரால் சூழப்பட்டது. குறிப்பாக, தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் சென்றதால் வண்ணாரப்பேட்டை, நெல்லை சந்திப்பு, திருநெல்வேலி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. இந்நிலையில், திருநெல்வேலி ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சேர்மன், ஆறுமுகக்கனி தம்பதியின் மகன் அருணாச்சலம் (19) என்ற இளைஞர், கடந்த 17ம் தேதி தனது பைக்கில் என்ஜிஓபி காலனி வழியாகச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள குளம் ஒன்று நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், சாலை ஓரமாக இருந்த ஓடை முழுவதும் தண்ணீர் சென்றது. எது சாலை என தெரியாமல், அருணாச்சலம் இருசக்கர வாகனத்துடன் ஓடைக்குள் விழுந்து சிக்கிக்கொண்டார். இதுகுறித்து அறியாத அவரது பெற்றோர், மகன் வீடு திரும்பாததால், கடந்த இரண்டு நாட்களாக பரிதவித்து வந்துள்ளனர். வெள்ளம் சற்று குறைந்ததை அடுத்து, அவர்கள் தங்கள் மகனை தேடிச்சென்றனர். ஆனால், அவர் எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில், என்ஜிஓபி காலனி அருகே உள்ள ஓடையில் இன்று அருணாச்சலம் சடலமாக மீட்கப்பட்டார். இது அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை அருணாச்சலத்தின் பைக் மீட்கப்பட்ட நிலையில், இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன் மூலம் நெல்லையில் மழை பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், சம்பவம் குறித்து விசாரணை நடத்து வருகின்றனர்.

தனது வீட்டில் வளர்க்கப்படும் பசு, ஈன்ற கன்றுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி!

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்