Rock Fort Times
Online News

காவல்துறை முழுமையான பாதுகாப்பு கொடுக்காததே கரூர் சம்பவத்துக்கு காரணம்- இபிஎஸ் குற்றச்சாட்டு…!

தவெக பரப்புரைக்கு போலீசார் முழுமையான பாதுகாப்பு வழங்காததே உயிரிழப்புக்கு காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து வரும் தவெக தலைவர் விஜய், நேற்றைய தினம் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். நாமக்கல் பிரச்சாரம் முடிந்து, இரவு 7 மணியளவில் கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய் உரையாற்றினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “ தவெக இந்த பிரச்சார கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். இந்த கூட்டத்தில் மின்தடை ஏற்பட்டு, அதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தவெக ஏற்கனவே நடத்தியுள்ள 4 பிரச்சார கூட்டத்தை ஆய்வு செய்து, காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். அதிமுக நடத்திய கூட்டத்திற்கும் காவல்துறை முழுமையான பாதுகாப்பு வழங்கவில்லை. 4 மாவட்டங்களில் முறையான பாதுகாப்பு வழங்கினர். அதன் பின்னர் காவல்துறை கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடவில்லை. ஆனால், ஆளும் கட்சியினருக்கு முறையான பாதுகாப்பு கொடுக்கின்றனர். இந்த அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும். திமுக ஆட்சியில் கூட்டம் நடத்துவதே சிரமம். நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெற்று கூட்டம் நடத்தும் சூழல் உள்ளது. அவ்வாறு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றாலும் இந்த அரசு முழுமையான பாதுகாப்பு கொடுப்பதில்லை. காவல்துறை முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால், இந்த தள்ளுமுள்ளு மற்றும் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்