திருச்சியில் பேருந்து இருக்கையுடன் நடத்துனர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் எதிரொலி: தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளையும் பராமரிக்க உத்தரவு…!
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கே.கே.நகருக்கு அரசு நகரப் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது.
கலையரங்கம் திருமண மண்டபம் வளைவில் திரும்பியபோது நடத்துநர் முருகேசன் (54) அமர்ந்திருந்த இருக்கை உடைந்து வெளியே தூக்கி வீசப்பட்டதில் அவர் காயமடைந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்த விவகாரம் தொடர்பாக பணிமனை மேலாளர் உள்ளிட்ட 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பேருந்து பராமரிப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை செயலர் க.பணீந்திர ரெட்டி மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட 8 கோட்டங்களின்கீழ் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பராமரிக்கப்படுகின்றன. இதில், சொகுசு பேருந்து, தாழ்தள சொகுசு பேருந்து, குளிர்சாதன பேருந்து, படுக்கை வசதி உள்ள பேருந்து உட்பட 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன. மின்சார பேருந்து உட்பட பல்வேறு பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக போக்குவரத்து துறை எடுத்து வருகிறது. இந்த சூழலில், செயல்பாட்டில் உள்ள அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்ய தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக புதிய பேருந்துகள், காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கை, பராமரிப்பு பணியில் உள்ள பேருந்துகளின் நிலை தொடர்பாக ஆய்வு நடத்தவும் பேருந்துகளை முறையாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.