Rock Fort Times
Online News

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு குறிப்பிட்ட தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும்- பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…!

பென்ஜல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது.  குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இன்னும் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் எழுது பொருட்கள் நீரில் மூழ்கி பலத்த சேதமடைந்துள்ளன. அவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுகள் மீண்டும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள பள்ளி அரையாண்டுத் தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.  இதுதொடர்பாக சென்னையில் இன்று(04-12-2024) செய்தியாளர்களிடம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில், பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் எந்த மாற்றமுமின்றி திட்டமிட்டபடி டிசம்பர் 9ம் தேதி முதல் நடைபெறும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிசம்பர் 9 ஆம் தேதிக்குள் இயல்பு நிலை திரும்பவில்லை எனில், அந்த பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவு செய்வார்கள். டிசம்பர் 2 ம் தேதி தொடங்கவிருந்த செய்முறைத் தேர்வு வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஜனவரி முதல் வாரத்தில் நடத்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்