மணப்பாறையில் நடைபெற உள்ள சாரண, சாரணிய வைர விழா ஏற்பாடுகளை அரசு செயலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆய்வு…!
சாரண, சாரணிய இயக்கத்தின் வைர விழா மற்றும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா, அகில இந்திய அளவிலான பெருந்திரளணி ஆகியவை திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரை நடைபெறுகிறது. பெருந்திரளணியில் 20,000 க்கும் மேற்பட்ட சாரண, சாரணியர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நாட்டின் அனைத்து மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களது கலாச்சாரம், பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்திக் காட்ட உள்ளனர்.
இதற்கான மேடை, கூடாரங்கள், சமையற் கூடங்கள், உணவு அருந்தும் அரங்கங்கள், குளியலறைகள், கழிப்பறைகள், புகைப்பட கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலர் மதுமதி, திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். ஒவ்வொரு இடமாக சென்று பார்வையிட்ட அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கேட்டறிந்தனர். 25 படுக்கை வசதி கொண்ட 2 மருத்துவமனைகள்,15 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மற்றும் அவசர உதவிக்காக 15 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தும் இடங்களையும், கண்காணிப்பு கேமராக்கள் அமையவுள்ள இடங்களையும் பார்வையிட்டனர். மேலும் , அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு துறையினருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தனர். இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரெத்தினம், உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் பழனிச்சாமி, ராமேஸ்வரமுருகன்,குப்புசாமி, சாரணர் இயக்க ஜாம்புரி இயக்குநர் அமர் பி.சேத்ரி, சாரண இயக்க தேசிய குழு முன்னாள் இயக்குநர் ராஜ்குமார் கேப்சிக், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி, முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா உள்ளிட்ட பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள், அரசுத்துறை உயர் அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.