அரசியல் ஆதாயம் தேடும் ஆட்டத்தை தொடங்கிவிட்டார் முதல்வர்- 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம்…* விஜய் பரபரப்பு பேச்சு!
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த சமயத்தில் தவெக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த சம்பவத்தை அடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒருமாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தீவிரமடைந்துள்ளன. அந்தவகையில் இன்று (05-11-2025) மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதன்பிறகு. பேசிய தவெக தலைவர் விஜய்,
“என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும் வணக்கம். நம்ம குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையிலும், வலியிலும் இருந்தோம். அதனால்தான் அமைதி காத்தோம்.ஆனால், இந்த சமயத்தில் நம் மீது வன்ம அரசியல் விமர்சனங்கள் பரப்பப்பட்டது. இதையெல்லாம் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணைகொண்டு முறியடிப்போம். அரசியல் செய்யவில்லை என பெயரளவில் பேசிவிட்டு, சட்டமன்றத்தில் முதல்வர் எவ்வளவு வன்மத்தைக் கொட்டினார் என்பதை மக்கள் உணராமலா இருப்பார்கள்?. இந்தியாவில் யாருக்கும் கொடுக்காத கட்டுப்பாடுகளை எங்களுக்கு கொடுத்தார்கள். நாங்கள் மக்களுக்கு வசதியாக ஒரு இடம் கேட்போம். அவர்கள் நெருக்கடியான ஒரு இடத்தை கொடுப்பார்கள். அது வாடிக்கையாகவே இருந்தது. இந்தியாவில் எந்த கட்சிக்கும் விதிக்காத விதிமுறைகளையெல்லாம் எங்களுக்கு விதித்தார்கள். நம்மைப் பற்றி விமர்சிக்கும் நேர்மைற்ற, குறுகிய மனம் கொண்ட முதல்வருக்கு சில கேள்விகள். இந்த கபட நாடக திமுக அரசின் பொய்களை வாதிட முடியாமல் கோடிகளை கொட்டி அமர்த்தப்பட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் திக்குமுக்காடி நின்றதை முதல்வர் அறியவில்லையா?, அவசர, அவசரமாக தனி நபர் ஆணையம் அமைத்தார்கள். அந்த ஆணையத்தை தலையில் கொட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டது உச்ச நீதிமன்றம். அவசர அவசரமாக பத்திரிகையாளர்களை சந்தித்து பொய் கூறினார்கள். 50 வருடமாக பொது வாழ்க்கையில் இருக்கக்கூடிய முதல்வர் சட்டமன்றத்தில் பேசியது எவ்வளவு பெரிய வடிகட்டிய பொய் என்பதை நான் சொல்லவில்லை. நீதிமன்றம் சொல்லியிருக்கிறது” . அரசியல் ஆதாயம் தேடும் ஆட்டத்தை தொடங்கி விட்டார் முதல்வர். இதற்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம். மீண்டும் சொல்கிறேன் வருகிற சட்டமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையே தான் போட்டி. ஒன்று திமுக, மற்றொன்று த.வெ.க. நமக்கு 100% வெற்றி உறுதி. தோல்வி அடைந்தவர்கள் வழக்கமாக எழுதி வைத்துக் கொள்வார்களே, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அதை திமுக இப்போதே எழுதி வைத்துக் கொள்ளலாம் என்று பேசினார்.

Comments are closed.