Rock Fort Times
Online News

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: இபிஎஸ் வழங்கிய ஆலோசனைகள் என்ன?…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று(05-11-2025) நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம், சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் நடப்பதால், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியான அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில், பூத் (பாகம்) கிளைக் கழகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவது குறித்த விவரங்களை மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் முழுமையாகக் கேட்டறிந்து, இப்பணியினை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி, 1.1.2026-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இது மிகவும் முக்கியமான பணி என்பதாலும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்வதற்கு இது சரியான தருணம் என்பதாலும் இதில் தனிக்கவனம் செலுத்தி, சரியான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலையொட்டிய பணிகளை விரைந்து ஆற்றுவது குறித்தும் விரிவாக ஆலோசனை வழங்கினார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்