திருச்சி மாநகராட்சியை விரிவுபடுத்தும் நோக்கில் மண்ணச்சநல்லூர் ஒன்றியம், லால்குடி ஒன்றியம், அந்த நல்லூர் ஒன்றியம், மணிகண்டம் ஒன்றியம் உள்ளிட்ட ஒன்றியங்களுக்கு உட்பட்ட 25 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்து திருச்சி மாநகராட்சியின் எண்ணிக்கையை 65 வார்டில் இருந்து 100 வார்டாக உயர்த்த அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை அன்று அதவத்தூர் ஊராட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முடிவை
அரசு கைவிடவில்லை என்றால் சுதந்திர தினத்தன்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்திருந்தனர். அதன்படி,
சுதந்திர தினமான இன்று(15-08-2024) அதவத்தூர் கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி தட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார், அதவத்தூர் ஊராட்சிக்கு சென்று கருப்பு கொடிகளை அகற்றுமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வீடுகளில் கட்டி இருந்த கருப்பு கொடியை மக்கள் அகற்றினர். சுதந்திர தினமான இன்று ஊராட்சிகள் தோறும் கிராமசபை கூட்டம் நடைபெறும். ஆனால், அதவத்தூர் ஊராட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments are closed.