குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாணவர்களை அழைத்து வந்தவர்களை கடிந்து கொண்ட தஞ்சை மாவட்ட ஆட்சியர்…!
தமிழகத்தில் உள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வருகிறது.
அந்தவகையில் இன்று(05-08-2024) தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி கோரி வடுகன் புதுப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மனு கொடுக்க வந்தனர். இதைப்பார்த்த ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கோபமடைந்தார். படிக்கும் மாணவ, மாணவிகளை அவர்களின் படிப்பைக் கெடுக்கும் விதமாக மனு கொடுக்க அழைத்து வருவது சரியானது அல்ல. முதலில் அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லுங்கள். பின்னர் வந்து மனு கொடுங்கள் என்று கடுமையாக எச்சரித்தார். இந்த சம்பவம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் தஞ்சாவூர் மேலவெளி ஊராட்சி வார்டு உறுப்பினர் ஐயப்பன் தலைமையில், அப்பகுதியை சேர்ந்த மக்கள் பள்ளி மாணவ, மாணவிகளை சீருடையுடன் அழைத்து வந்து மனு அளித்தனர். மாணவ, மாணவிகளுடன் மற்றொரு தரப்பினர் வந்ததால் மாவட்ட ஆட்சியர் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார். மனு கொடுக்க வரும் நீங்கள் எதற்காக படிக்கும் மாணவ, மாணவிகளை அழைத்து வருகிறீர்கள்?அவர்களின் படிப்பை வீணாக்குகிறீர்கள். இது தவறான விஷயம். சட்டப்படி குற்றம். பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளி நேரத்தில் அழைத்து வருவது சரியான முறையல்ல. இதற்காக உங்களுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பப்படும். இதேபோல் மீண்டும் செய்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
Comments are closed.