கட்டுப்பாட்டை இழந்து குலுங்கி, குலுங்கி ஆபத்தான நிலையில் செல்லும் தமிழ்நாடு அரசு நகர பேருந்தின் அவல நிலை…(வீடியோ இணைப்பு)
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் கிடையாது என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். என்றாலும், பெரும்பாலான நகர பேருந்துகள் மிகவும் பழுதடைந்து ஆபத்தை விளைவிக்கும் நிலையிலேயே இயக்கப்படுவது வேதனை தரும் விஷயம். அப்படி ஒரு நகரப் பேருந்து மதுரையில் இயக்கப்பட்டதை கண்கூடாக காண முடிந்தது. மதுரையில் இருந்து அழகர்கோவில் நோக்கி நேற்று(6-1-2024) நகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அதில் பயணிகள் அதிகம் பேர் பயணம் செய்தனர். குறிப்பாக, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பின் வரிசையில் அதிகம் பேர் இருந்தனர். மிகவும் பழுதடைந்த அந்த நகரப் பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து குலுங்கி, குலுங்கி விபத்தை ஏற்படுத்தும் வகையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தின் பின்னால் காரில் சென்று கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சி ஓபிசி அணி மாநிலத் துணைத் தலைவரும், திருச்சி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான எஸ்.பி.சரவணன் பார்த்து பதற்றம் அடைந்தார். பஸ் விபத்தில் சிக்கினால் அதில் உள்ள பயணிகள் நிலை என்னவாகும் என்று நினைத்த அவர், அந்த பேருந்தை ஓவர் டேக் செய்து நிறுத்தி அதன் டிரைவரிடம் இந்த பேருந்தில் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டாம். மாற்றுப் பேருந்தில் அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதன்பேரில், அதில் இருந்த பயணிகள் இறக்கப்பட்டு அந்த வழியாக வந்த மற்றொரு நகர பேருந்தில் ஏற்றி விடப்பட்டனர். ஆனால், அந்த நகர பேருந்தும் பழுதான நிலையில் சற்று தூரம் தள்ளிவிட்ட பிறகுதான் “ஸ்டார்ட்” ஆனது.
“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதைப்போல இந்த ஒரு பேருந்தை போல தமிழகத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு நகர பேருந்துகள் இந்த நிலையில்தான் இருக்கின்றன என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்று மிகவும் பழுதடைந்த, மக்களுக்கு பயன் தராத பேருந்துகளை நிறுத்திவிட்டு புதிதாக பேருந்துகளை இயக்க முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் வலியுறுத்தி இருந்தார். அந்த அறிவிப்பாணை என்ன ஆனது என்று தெரியவில்லை. அவரும் ஓய்வு பெற்று விட்டார். இனிமேலாவது இதுபோன்று பொதுமக்களுக்கு நன்மை தராத பழுதடைந்த பேருந்துகளை நிறுத்திவிட்டு புதிய பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.