Rock Fort Times
Online News

த.வெ.க. மாநில மாநாடு: கட்சியினருக்கு திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் வி.எல்.ஸ்ரீனிவாசன் அறிக்கை…!

தமிழகம் மட்டுமில்லாமல் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜயின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாடு நாளை(27-10-2024)
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட த.வெ.க தொண்டர்களுக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்கறிஞர் வி.எல்.ஸ்ரீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்., தமிழகத்தின் நம்பிக்கை நாயகன், நம் அனைவரது உள்ளத்திலும் நீங்காது இடம் பிடித்துள்ள நம் தலைவர் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நாளை நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு எனும் கொள்கை திருவிழாவில் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளும், கட்சித்தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டு நம் தலைவரின் கரங்களை வலுப்படுத்த அன்போடு அழைக்கிறேன். இதுவரை திரைப்படங்கள் மூலம் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை பேசி வந்த நம் தலைவர், தற்போது நம்மை நம்பி அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். அவரின் கரங்களை வலுப்படுத்த வேண்டியது தொண்டர்களாகிய நம் அனைவரின் முதல் கடமையாக உள்ளது.
கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றி கழகத்தின் வலுவான அடையாளத்தை தமிழக அரசியல் களத்தில் பதிக்க வேண்டிய முக்கியமான வரலாற்று நிகழ்வில் நாம் பங்கெடுக்க இருக்கிறோம். நம் மீது உள்ள பேரன்பின் காரணமாக நம்மையெல்லாம் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் நம் தலைவரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், நாளை நடைபெற உள்ள மாநில மாநாட்டில் கலந்து கொள்ளும் திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தொண்டர்களும், உறுப்பினர்களும் தவறாது அரசியல் ஒழுங்கையும், பயண நெறிமுறைகளையும், போக்குவரத்து விதிமுறைகளையும் கடைபிடித்து மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். நம் கட்சியின் முதல் மாநில மாநாடு வெற்றி கொள்கை திருவிழாவை தொண்டர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெற செய்து, தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்க விக்கிரவாண்டியில் ஒன்று கூடுவோம். ஒன்று கூடட்டும் இளையோர் எழுச்சி.எழுதப்படட்டும் புதிய அரசியல் புரட்சி என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்