Rock Fort Times
Online News

தமிழகத்தில் பாஜகவின் சூழ்ச்சியை தடுப்பதற்காகவே விஜய்க்கு ஆதரவு…* கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கம்..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் அக்கட்சிக்கு 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த நிலையில், ஆட்சியமைக்க மேலும் 6 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. இது ஒருபுறம் இருக்க ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநரிடம் தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்த நிலையில், பெரும்பான்மைக்கான பட்டியலை அளிக்குமாறு ஆளுநர் கேட்டிருந்தார். இந்தநிலையில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டிருந்தது. இதன் பயனாக 4 உறுப்பினர்களைக் கொண்ட இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தி இன்று( மே 8) தமிழக வெற்றி கழகத்திற்கு தங்களது ஆதரவினை தெரிவித்தன. இதன்மூலம், விஜயின் பலம் 116 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் விஜய்க்கு ஆதரவு கொடுத்தது ஏன் என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சண்முகம் ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், தவெக சார்பில் எங்களிடம் ஆதரவு கேட்கப்பட்டது. நாங்கள் ஆதரவு தர முன்வந்திருக்கிறோம். தேர்தலில் மக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதனை மதித்து தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். 10-ந் தேதிக்குள் புதிய அரசு அமைய வேண்டும். இல்லையென்றால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையக் கூடிய சூழல் உள்ளது. ஆளுநர் மூலமாக தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. இதனை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். வெளியே இருந்து தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம். மேலும் ஒரு தேர்தலை தடுப்பதற்காகவும், ஆளுநர் ஆட்சியை தடுப்பதற்காகவுமே தவெகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம். நாங்கள் திமுக கூட்டணியில் நீடிக்கிறோம். தவெகவுக்கு தற்போது ஆதரவு தான் அளிக்கிறோம். தவெகவுக்கு தற்போது அளிப்பதை கூட்டணியாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை” என்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்