ராகுல் காந்தியை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: திருச்சி சிட்டி கமிஷனரிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் புகார் மனு …! ( வீடியோ இணைப்பு)
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினியிடம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம். சரவணன் தலைமையில் காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் சிந்தாமணி ஜெ.செந்தில்நாதன், மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் மற்றும் நிர்வாகிகள் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி எம்.பி. கடந்த 17-09-2024 அன்று அமெரிக்க பயணத்தின்போது, நாட்டை ஆளுகின்ற பாசிச பாஜக கடந்த 10 ஆண்டுகளாக நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை என்றும், பாஜக ஆட்சியில் இந்தியாவின் நிலை குறித்தும் உரையாற்றினார். அவரது பேச்சை ஏற்க மறுத்த மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட் என்பவர் ஆபாசமாக பேசியதோடு ராகுலின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார். அவரைத்தொடர்ந்து மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக எம்.பி அணில் பாண்டே என்பவர் ராகுல் காந்தி நாக்கை அறுப்பதை விட சூடு வைப்பது தான் சிறந்தது என்று பேசியுள்ளார். மேலும், ராகுல் தான் நாட்டின் முதல் தீவிரவாதி என்று வெறுப்புணர்வை தூண்டும் வகையில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவீந்திர சிங் பிட்டு பேசியுள்ளார். கடந்த 11-09-2024ம் தேதி அன்று பாஜகவின் மூத்த தலைவர் தர்பேந்திர சிங் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது ராகுல் காந்தி, அவரது பாட்டி இந்திரா காந்தி எவ்வாறு கொல்லப்பட்டாரோ அவ்வாறே கொல்லப்படுவார் என்று மிரட்டல் விடுத்து பேசி உள்ளார் . தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் எச் ராஜா, தலைவர் ராகுல்காந்தியை தேச விரோதி என்றும், தரக்குறைவான வார்த்தைகளில் பேசி வருகிறார். மத்திய ஆளுங்கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களே இவ்வாறு பேசுவது மிகவும் கண்டனத்திற்கு உரியது. எனவே, இவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. புகார் மனு அளிக்கும் போது வழக்கறிஞர் பிரிவு விக்னேஷ், வனஜா, மோகனாம்பாள், கௌசி, கார்த்திகா, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலை விக்டர், மார்க்கெட் மாரியப்பன், நிர்மல் குமார், கலை பிரிவு ராஜீவ்காந்தி சண்முகம், மணிவண்ணன், சத்தியநாதன், அருண், சண்முகவேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.