Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேரோட்டம்- ரெங்கா…ரெங்கா…கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்…!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா பிப்ரவரி 2-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 5 -ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள், உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் 8ம் நாளான நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(10-02-2025) காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 5 மணிக்கு வந்தார். காலை 5 மணிமுதல் காலை 5.45 மணிவரை ரதரோஹணம்(மகர லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.15 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேர் நான்கு உத்திர வீதிகளில் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.

நாளை (11-ந்தேதி) சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 12-ந்தேதி மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவதோடு தைத்தேர் திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்