ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை(12-ந்தேதி) திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 2-ந்தேதி வரை நடைபெறுகிறது.
13-ந்தேதி பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. 22-ந்தேதி மோகினி அலங்காரமும், 23-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது. 29-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 30-ந்தேதி திருமங்கைமன்னன்வேடுபறி நிகழ்ச்சியும், ஜனவரி 1-ந்தேதி தீர்த்தவாரியும், 2-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவடைகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாஸ் மண்டபம் அருகில் புறகாவல் நிலையம் இன்று திறக்கப்பட்டது. புறக்காவல் நிலையத்தை திருச்சி போலீஸ் கமிஷ்னர் என். காமினி ஐபிஎஸ் திறந்து வைத்து நிருபர்களிடம் கூறியதாவது :வைகுண்ட ஏகாதாசி திருவிழாவில் கடந்த வருடம் சுமார் 2லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிந்தார்கள். இந்த வருடம் சுமார் 2.5லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளூர், வெளியூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சுமார் 2500 பேர் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட உள்ளார்கள். பகல்பத்து மற்றும் இராப்பத்தின் போது திருச்சி மாநகர காவல் ஆளிநர்கள் மட்டும் 380 பேர் 2 ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.இந்த வருடம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நான்கு சக்கர வாகனங்களை சித்திரைவீதி மற்றும் உத்திரவீதியில் நிறுத்த அனுமதி இல்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கோவிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில் 120 சிசிடிவி கேமராக்கள், கோவிலை சுற்றி வெளிப்புறத்தில் 102 சிசிடிவி கேமராக்கள், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் 14 சிசிடிவி கேமராக்கள் என மொத்தம் 236 கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை புறக்காவல் நிலையத்தில் இருந்தே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒலிப்பெருக்கி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவிப்பு செய்து தகவல் தெரிவிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் கோவிலின் உட்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள 120 சிசிடிவி கேமராக்களிலும் 70ஆயிரம் குற்றவாளிகளின் புகைப்படங்களை முகம் அடையாளம் காணும் மென்பொருள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. யாரேனும் குற்றவாளிகள் அங்கு நடமாடினால் மேற்கண்ட கேமராவானது குற்றவாளிகளின் முகங்களை ஸ்கேன் செய்து மென்பொருளில் பொருத்தப்பட்டுள்ள குற்றவாளிகளின் புகைப்படங்களுடன் ஒப்பீடு செய்து காவல்துறைக்கு எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்தும். வரும் 13-ந்தேதியிலிருந்து 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார்.பேட்டியின் போது போலீஸ் துணை கமிஷனர்கள் அன்பு, செல்வகுமார், ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் நிவேதாலெஷ்மி, கோவில் இணை ஆணையர் மாரியப்பன், சுந்தர்பட்டர் நந்துபட்டர் ஆகியோர் உடனிருந்தன
1
of 927
Next Post
Comments are closed, but trackbacks and pingbacks are open.