திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர்- ஜெய்லானி பீவி தம்பதியருக்கு 4 மகள்களும், அம்ருதீன் ஷேக்தாவூத் என்ற மகனும் உள்ளனர். அப்துல் காதர் சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வந்தார். குழந்தைகள் சிறுவயதாக இருக்கும்போதே அப்துல் காதர் உயிரிழந்துவிட்டதால், தாய் ஜெய்லானி பீவி கடையை நிர்வகித்து, தனது குழந்தைகளை படிக்க வைத்து, திருமணம் செய்துவைத்து, நல்ல நிலைக்கு உயர்த்தினார். பி.ஏ படித்துள்ள அம்ருதீன் ஷேக் தாவூத், சென்னையில் அரிசி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், 2020-ம் ஆண்டு தனது 72-வது வயதில் ஜெய்லானி பீவி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, காதலியின் மீதான அன்பை வெளிப்படுத்த ஆக்ராவில் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹாலைப் போன்று, தனது தாய் மீதான அன்பின் அடையாளமாக அம்மையப்பன் பகுதியில் ஒரு நினைவிடம் கட்ட அம்ருதீன் ஷேக் தாவூத் முடிவு செய்தார். இதற்காக, திருச்சியைச் சேர்ந்த கட்டிட பொறியாளர் ஒருவரின் வழிகாட்டலில், ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்களை வாங்கி வந்து , கடந்த 2 ஆண்டுகளில் ரூ.5 கோடி செலவில் தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லத்தைக் கட்டியுள்ளார். இங்கு ஜெய்லானி பீவியின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு இல்லத்துக்கு கடந்த ஜூன் 2-ம் தேதி திறப்புவிழா நடைபெற்று, பொதுமக்களின் பார்வைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. மதங்களை கடந்து அன்பை நேசிக்கும் அனைவரும் இந்த நினைவு இல்லத்தை பார்வையிட்டு வருகின்றனர். இங்கு 5 வேளை தொழுகை நடத்திக்கொள்ளும் வகையில் மதரஸாவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெய்லானி பீவி அமாவாசையன்று உயிரிழந்ததால், அமாவாசைதோறும் 1,000 பேருக்கு பிரியாணி சமைத்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தனது தாயின் நினைவிடத்தைப் பார்த்து, அனைவரும் அதிசயித்து பேசிச் செல்லும்போது, தனது தாய் இன்னும் தன்னுடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக அம்ருதீன் ஷேக்தாவூத் தெரிவித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.