திருச்சி மாவட்ட எஸ்.பி.ஆக பணிபுரிந்தவர் வீ.வருண்குமார் ஐபிஎஸ். மாவட்டத்தில் போதை பொருட்கள் கலாச்சாரம், திருட்டு லாட்டரி விற்பனை, கள்ளச் சாராய விநியோகம் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுத்தார். “ஆபரேஷன் அகழி” என்கிற பெயரில் ஏழை, எளிய மக்களிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் நபர்களையும் கண்டறிந்து கைது செய்தார். இதனால் பொதுமக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இவரது மனைவி வந்திதா பாண்டே. இவரும் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.பி. யாக பணியாற்றினார். இருவரும் தங்களது கடமைகளில் திறம்பட செயலாற்றியதால் தமிழ்நாடு அரசு அண்மையில் இருவருக்கும் ஓருசேர டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கியது. வருண்குமார் திருச்சி சரக டிஐஜி யாகவும், வந்திதா பாண்டே திண்டுக்கல் சரக டிஐஜி யாகவும் நியமிக்கப்பட்டனர். இந்த தம்பதி சமூக ஊடகங்களில் நல்ல தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால், அவர்களை ஏராளமான நபர்கள் பின் தொடர்கின்றனர். இந்தநிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் வந்திதா பாண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது கணவரும், தானும் எஸ்.பி.யாக இருந்து டிஐஜி யாக அந்தஸ்து பெற்றதை குறிப்பிடும் வகையில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்ப்போர் ஐ.பி.எஸ். தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு “உங்களது சேவை தமிழ்நாட்டுக்கு தேவை” என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கான காவல் சரக டி.ஐ.ஜி யான வீ.வருண்குமார் ஐபிஎஸ்க்கு வருகிற ஜனவரி 29ம் தேதி புதன்கிழமையன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.