Rock Fort Times
Online News

தமிழகத்தில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு… * தவெக அரசை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்…!

தமிழகத்தில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்கு அரிவாள் வெட்டு
சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் அரிவாள் வெட்டு தலை தூக்கி உள்ளது. சட்டம், ஒழுங்கு சீரழிந்து இரத்தச் சகதியில் தமிழ்நாடு சிக்கி உள்ளது. குற்றவாளிகள் தைரியமாக நடமாடுகின்றனர். பொதுமக்கள் அச்சத்தோடு வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதற்குச் சான்றாக கடந்த 24 மணி நேரத்தில் வெளியாகிய அதிர்ச்சிச் செய்திகள் அமைந்துள்ளன. சென்னை, மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் சத்தியசீலன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருத்தணியில் தனது 17 வயது மகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்த தந்தை அவரது வீட்டின் முன்பே வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கிறது. சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜனாபாய் எனும் மூதாட்டி பகலிலேயே கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையாளிகள் அவரது நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டுத் திரும்பும்போதே வீரபத்திரன் என்பவர் மர்ம நபர்களால் மனைவி முன்பு வைத்துச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே மது போதையில் நிர்வாணமாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். சோழவந்தானில் டாஸ்மாக் கடை அருகே பைக்கில் வந்த சியாம் சுந்தர்ராஜன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். எண்ணூர் இரயில் நிலையத்திலேயே மாணவர்களை வெட்ட முயற்சி நடந்துள்ளது. வீட்டிலும் பாதுகாப்பில்லை, வெளியிலும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் மக்கள் பரிதவித்துக் கிடக்கின்றனர். காவல்துறையினரால் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறதா இல்லையா? சிங்கப்பெண் அதிரடிப்படையினர் ரீல்ஸ் போடுவதில் காட்டும் ஆர்வத்தைப் பெண்களின் பாதுகாப்பில் காட்டுவார்களா மாட்டார்களா? காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் புகார் தெரிவித்தவர்களே கொலைக்கு உள்ளாகும் அராஜகத்துக்கு முடிவு எப்போது? குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?. தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு நாளாக நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டிய முதலமைச்சரின் கவனம் மொத்தமும் தனது நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே இருக்கிறது. அதற்கான விலையாக அப்பாவி மனித உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன. காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நிலைமையின் வீரியத்தை உணர வேண்டும். ‘Take – Action’ ShootingMode-இல் இருந்து விடுபட்டு, Please Take Action CM Sir. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்