மாத்திரை கவர் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹிந்தி எழுத்துக்கள்: மலிவான அரசியல் செய்வதா?* திமுகவுக்கு அமைச்சர்கள் கண்டனம்..!
அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மாத்திரை கவர்களில் ஹிந்தி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எதற்கெடுத்தாலும் மொழியை வைத்து மலிவான அரசியல் பிழைப்பு நடத்தும் திமுகவினர், தற்போது கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாத்திரை உறைகளைக் கையில் எடுத்து, தாங்கள் செய்த வரலாற்றுப் பிழையை மறைத்து இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி முதலைக் கண்ணீர் வடிப்பதற்கு எங்கள் கடும் கண்டனங்கள்.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்கள் பொதுவாக மத்திய சிறையில் இருந்து பெறப்பட்டு, அதில் ‘காலை / மதியம் / இரவு’ போன்ற குறிப்புகள் தமிழ் மொழியில் மட்டுமே முத்திரையிடப்பட்டு வழங்கப்படுவது வழக்கம். கடந்த டிசம்பர் 2025-ல், மத்திய சிறையிலிருந்து வரும் கவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஈரோடு மாவட்ட அச்சக தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் 4 லட்சம் கவர்கள் அச்சிட கடந்த திமுக ஆட்சியில் டிசம்பர் 31, 2025 அன்று அவசர ஆணை வழங்கப்பட்டு, அந்த கவர்கள் 2026 ஜனவரி மாதத்திலேயே (திமுக ஆட்சிக் காலத்திலேயே) மக்களிடம் புழக்கத்திற்கு வந்துவிட்டன. அதேபோல் கோவையில் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அதாவது திமுக ஆட்சியில்தான் அலுவலக நடைமுறையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் மூலம் அச்சிடப்பட்டு நடைமுறைக்கே கொண்டு வரப்பட்டது. இப்போது ஆளுங்கட்சி மீது பழிபோடுவது எந்த வகையிலான அரசியல்? தங்கள் ஆட்சியிலேயே இவை புழக்கத்திற்கு வந்தபோது வாய்மூடி, கைகட்டி மௌனியாக இருந்த திமுகவினர் இப்போது திடீரென மொழிப்போர் காவலர்கள் போல் வேடம் போடுவது ஏன்? தாங்களே இந்தியைத் திணித்துவிட்டு, இப்போது அதனை ஒரு பூதாகரமான பிரச்சனையாக மாற்றி அரசியல் குளிர்காய நினைப்பது திமுகவின் அப்பட்டமான பித்தலாட்டம். இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு வந்தவுடனேயே. கரூர் மற்றும் கோவை ஆகிய இரு இடங்களிலும் அந்த மாத்திரை உறைகளின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பழைய நடைமுறைப்படி, மத்திய சிறையிலிருந்து கவர்கள் பெறப்பட்டு ‘தமிழ் மொழியில் மட்டுமே’ விவரங்கள் முத்திரையிடப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கும் பணி உறுதி செய்யப்பட்டுள்ளது. பொய்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்து பழகிப்போன திமுகவினர் இனிமேலாவது இதுபோல் மலிவான அரசியலை விடுத்து ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் ரமேஷ் பதிலடி,
இதேபோல, மதுரை கள்ளழகர் கோயில் நுழைவு வாயிலில் ‘ஹிந்தி’க்காக தமிழ் மொழியில் எழுதப்பட்டிருந்த கோயில் பெயர் நீக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக செய்தி சேனல் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலியான செய்தி. அதில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தில், பெயர்ப்பலகையில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துகளை திட்டமிட்டு ஃபோட்டோஷாப் மூலம் மறைத்து, தமிழ் நீக்கப்பட்டதைப் போன்ற ஒரு போலியான புகைப்படத்தை உருவாக்கி, அதனை உண்மையான புகைப்படம் போல சித்தரித்து வெளியிட்டுள்ளனர்.மதுரை கள்ளழகர் திருக்கோயிலின் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், கடந்தாண்டுகளில் எப்படி பெயர் பலகை இருந்ததோ இப்போதும் அதே முறையில்தான் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.