திருச்சி எஸ்.பி வருண்குமார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்..
-ப. பாஸ்கா்
தினமும் இரவில் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களாலும், பள்ளி மாணவர்களை ‘டார்கெட்’ செய்து விற்கப்படும் கஞ்சா போன்றவற்றால் நிம்மதியிழந்து பரிதவித்து வருகின்றனர் புத்தனாம்பட்டி கிராம மக்கள்.
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகாவிற்குட்பட்டது புத்தனாம்பட்டி. புலிவலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இக்கிராமத்தில், கடந்த 4 மாதங்களில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் இரவு நேரத்தை உயிர் பயத்துடனேயே கடக்க வேண்டியிருக்கிறது என்று திகிலூட்டுகின்றனர் புத்தனாம்பட்டி கிராம மக்கள்.
இதுகுறித்து நாம் அந்த ஊரை சேர்ந்த சிலரிடம் விசாரித்தபோது.,
“கடந்த சனிக்கிழமை இரவு 1 மணி முதல் 3-.30 வரை புத்தனாம்பட்டியை குறிவைத்து சுமார் பத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை கும்பல் கைவரிசையை காட்டியுள்ளது. இதில் ஒருவரது வீட்டில் 7 பவுன் நகை மற்றும் 25 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்ததோடு, அடுத்தடுத்த வீடுகளில் கைக்கு கிடைத்த பணம், பொருட்கள் உள்ளிட்டவற்றை அள்ளிச்சென்றுள்ளனர். இதேபோல் கடந்த ஜீன் மாதம் 17ம் தேதி இதே ஊரைச்சேர்ந்த பார்த்திபன் என்பவரது வீட்டில் 9 1/2 பவுன் நகை மற்றும் 54 ஆயிரம் பணம் ஆகியவற்றையும், மாலா சுப்பிரமணி என்பவரது வீட்டில் 3 1/2 பவுன் நகை மற்றும் 24 ஆயிரம் பணம் ஆகியவற்றையும் கொள்ளை கும்பல் திருடிச்சென்றுள்ளது. கடந்த நான்கு தினங்களுக்கு முன்புகூட வேலை முடித்து வீட்டிற்கு வரும்வழியில் ஒருவரை மடக்கிப்பிடித்த 3 பேர் கொண்ட கும்பல், அவரை அடித்து கீழேதள்ளிவிட்டு அவர் வைத்திருந்த டூ- வீலரை பிடுங்கிச் சென்றுள்ளது. இதுகுறித்து காவல்நிலையத்தில் இதுவரை நாங்கள் கொடுத்த புகார்களில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த சனிக்கிழமை திருட்டு சம்பவம் நடைபெற்ற உடனே திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பியிடம் புகார் கொடுத்தோம். அதன்படி, ஏடிஎஸ்பி தலைமையிலான போலீசார், மோப்ப நாயுடன் புத்தனாம்பட்டிக்கு வந்து திருட்டு நடைபெற்ற வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனாலும் இதுவரை தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கொள்ளை கும்பல் யார்? என்பதை கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து புத்தனாம்பட்டியை குறிவைத்து நடத்தப்படும் திருட்டு சம்பவங்களால், எங்களால் இரவில் நிம்மதியாக தூங்கக்கூட முடியவில்லை. அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ? என்ற படபடப்புடனேயே இரவை கழிக்க வேண்டியிருக்கிறது என்கின்றனர்.
இது ஒருபுறமென்றால் புதமானாம்பட்டி கல்லூரியில் படிக்கவரும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையும் படுஜோராக நடக்கிறது. இதனால் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி தவறான பாதையில் செல்ல வழிவகுப்பதோடு, அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழலும் புத்தனாம்பட்டியில் நிலவி வருகிறது. முன்பு இதேபோன்று பள்ளி மாணவர்களை குறிவைத்து கல்லாகட்டிய கஞ்சா விற்பனை கும்பலை கட்டுப்படுத்த அப்போதைய மத்திய மண்டல ஐ.ஜி வி.பாலகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தோம். அவரும் கரூர், சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் போலீசாரிடம் இதுகுறித்து ஆய்வு நடத்தி ரிப்போர்ட் கொடுக்க உத்தரவிட்டார். போலீசார் நடத்திய ஆய்வில் புத்தனாம்பட்டியில் கஞ்சா விற்கப்படுவது உண்மை என தெரியவரவே, சம்பந்தப்பட்வர்களை தண்டித்ததுடன் மீண்டும் புத்தனாம்பட்டியில் கஞ்சா விற்பனை நடைபெறாதவாறு தகுந்த நடவடிக்கைகள் எடுத்தார். ஆனால், பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கி பணம் கண்ட சமூக விரோத கும்பல், மீண்டும் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது. ஒரு பக்கம் சிறுக,சிறுக சேர்த்து வைத்த பணத்தை வைத்து, வீடு கட்டலாம், தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து முடித்துவிடலாம் என்ற பலவித கனவுகளோடு காத்திருந்தவர்களுக்கு, திருட்டு சம்பவங்களால் அதிர்ச்சியும், மறுபுறம் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதால் பயமும் தான் மிச்சமாக கிடைத்திருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் தலையிட்டு திருட்டு கும்பல் மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் சமூக விரோதிகளை இரும்புகரம் கொண்டு அடக்கி புத்தனாம்பட்டியில் அமைதியும், நிம்மதியும் நிலைநாட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.” என்று பேசிமுடித்தார் அவர்.
நியாயமான, அதிரடி போலீஸ் எஸ்.பி வீ.வருண்குமார் ஐ.பி.எஸ், இவ்விவகாரம் குறித்து விசாரித்து நிச்சயம் நடவடிக்கைகள் மேற்க்கொள்வார் என்று நம்புகிறோம்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.