தமிழ்நாட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.4,730 கோடி மதிப்பிலான ஆற்று மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு வரை கூடுதலாக ஆற்று மணல் அள்ளியதன் மூலம் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மணல் குவாரி முறைகேடு தொடர்பாக திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள பிரபல தொழில் அதிபர் ரத்தினம் இல்லம், அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 5 வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல புதுக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் மணல் குவாரி அதிபர்களின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத்துறை கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி கடிதம் அனுப்பியது. ஆனால் அப்போது திமுக ஆட்சி நடைபெற்றதால், அமலாக்கத்துறை கடிதத்தின்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் பின்னர், அமலாக்கத்துறை கடந்த ஜூலை 18-ம் தேதி டிஜிபிக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதமும் அனுப்பியது. இந்நிலையில், அமலாக்கத்துறை அளித்த புகார், ஆவணங்களின் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியது. இதனையடுத்து மணல் குவாரி முறைகேடு தொடர்பாக சென்னை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது. இதற்கு முன்னதாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நடைபெற்ற பணப்பரிவர்த்தனை முறைகேடு தொடர்பாக தொழில் அதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை இரண்டு முறை சோதனை நடத்தி, வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சி :
இதேபோல திருச்சி மன்னார்புரம் நீர்வளத்துறை அலுவலர் குடியிருப்பு பகுதியில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலை அருகே அமைந்துள்ள நீர்வளத்துறை அதிகாரிகள் குமரவேல், சுகுமாரன், செல்வகுமாரி ஆகியோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.