பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை… * அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!
கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் மாபெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பன்னாட்டுத் தர ஐ.எஸ்.பி.என் எண்கள் போலியானவை என்றும், 300 பக்கங்கள் கொண்ட ஒரு நூல் ரூ.1,445-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், பிற பதிப்பகங்களில் அதே நூல்களின் விலை ரூ.350 மட்டுமே என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், இந்த நூல்களில் வரலாற்றுப் பிழைகள் மற்றும் தவறான தகவல்கள் இடம்
பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பெரியார் அறிவுலகத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த புகார் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளார். பெரியார் அறிவுலகத்திற்காக புத்தகங்கள் வாங்குவதற்கு கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பாக விசாரணை உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Comments are closed.