Rock Fort Times
Online News

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா- கொடியேற்றத்துடன் தொடக்கம்…!

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்குகிறது. வேறு எந்த தலத்திலும் காணப்பெறாதபடி இத்திருத்தலத்தில் அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக, சிவபதத்தில் விக்ரம சிம்மாசனத்தில் எழுந்தருளி மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்களும், தீவினைகளும் அணுகாமலும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் மாசி கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிப் பெரும் சிறப்பாகும். இத்தகைய சிறப்புமிக்க பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல் ( கொடியேற்றுதல் முதல் திருநாள்), காத்தல் (ரிஷப வாகன காட்சி ஐந்தாம் திருநாள்), அழித்தல் (திருத்தேர் பத்தாம் திருநாள்), மறைத்தல் (முத்துப்பல்லக்கு உற்சவம் பனிரெண்டாம் திருநாள்), அருள்பாலித்தல் ( தெப்பம் பதிமூன்றாம் திருநாள்) இந்த ஐந்து தொழில்களையும் சித்திரைப் பெருவிழா நாட்களில், இங்கு அம்மன் அருள் புரிந்து வருவது இத்திருத்தலத்தின் மற்றும் ஒரு சிறப்பாகும். இத்தகைய சிறப்புக்குரிய இத்தலத்தில் சித்திரைப் பெருந்திருவிழா இன்று(07-04-2024) கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காலை 7.35 மணியளவில் உற்சவ அம்பாள் கிராம்பு, ஏலக்காய் மாலையுடன் கேடயத்தில் புறப்பாடாகி தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார். பின்னர், கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 8 மணி அளவில் ஓம் சக்தி, பராசக்தி கோஷம் முழங்க சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு கேடயத்திலும், தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மரசிம்ம வாகனம், மர பூத வாகனம், மர அன்ன வாகனம், மர ரிஷப வாகனம், மர யானை வாகனம், மர சேஷ வாகனம், மரக் குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறும். 15 ம் தேதி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 16ம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து, 17ம் தேதி வெள்ளிக் காமதேனு வாகனத்திலும், 18ம் தேதி முத்துப்பல்லக்கும், 19ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறும். மேலும், 23ம் தேதி தங்க கமலவாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். கொடியேற்ற நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி இளங்கோவன், கோவில் இணை ஆணையர் சி.கல்யாணி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், திரளான பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்