Rock Fort Times
Online News

திருச்சியில் புகையிலை பொருட்கள் விற்பனை : 38 கடைகளுக்கு சீல் வைத்து அதிரடி! ரூ. 12 லட்சம் அபராதம் விதிப்பு !

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பல இடங்களில் தாராளமாக கிடைக்கின்றன. குறிப்பாக, இளைஞர்கள், மாணவர்கள் இவற்றை வாங்கி பயன்படுத்துவதால் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி அவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். இவற்றை தடுக்க போலீசாரும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும்,அவற்றின் விற்பனை மட்டும் குறைந்தபாடில்லை. இதற்கு காரணம்,சிறிய அளவில் வாங்கிவிற்கும் கடைகளில் மட்டுமே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை செய்து அவற்றை பறிமுதல் செய்கின்றார்கள் என்று கூறப்படுகிறது. அத்துடன் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், உடனே அபராதத்தை செலுத்தி, ஜாமினில் வந்து மீண்டும் தங்கள் தொழிலை தொடங்கி வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு விற்பனை செய்யும் பெரு வியாபாரிகள் சிக்குவதில்லை. கடந்த சில மாதங்களில் திருச்சி மாநகரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக, 13 போலீஸ் நிலையங்களில் டீகடைக்காரர், மளிகை கடைக்காரர், பெட்டிக்கடைக்காரர், என்று 73 பேர் மீது வழக்கு பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தவரின் பெயரிலும், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி அறிவுறுத்தலின் பேரிலும் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர்.ரமேஷ் பாபு தலைமையில் 9 உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழுவினர் மாநகரில் புகையிலை பொருட்கள் விற்ற 38 கடைகளுக்கு சீல் வைத்தனர். அத்துடன் அவர்களுக்கு மொத்தம் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றும்,தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்