சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விமான நிலைய புறப்பாடு பகுதி வழியாக விமான நிலையத்தில் உணவு விடுதி ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் மணிகண்டன் (28) என்பவர் கையில் பிளாஸ்க் ஒன்றுடன் வெளியே வந்தார். அப்போது விமான நிலைய பாதுகாப்பு படை வீரர், மணிகண்டனை நிறுத்தி விசாரணை நடத்தினார். அதோடு அவர் கையில் வைத்திருந்த பிளாஸ்க்கையும் திறந்து பார்த்தார். அப்போது அந்த பிளாஸ்கினுள், காபிக்கு பதிலாக தங்க கட்டிகள் மற்றும் தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது.
இதை அடுத்து பாதுகாப்பு படை அதிகாரிகள் மணிகண்டனையும், அவர் கொண்டு வந்த தங்க நகைகளையும் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் பிளாஸ்க்கில் இருந்த தங்க நகைகளை எடை போட்டு பார்த்த போது 1.4 கிலோ இருந்தது. அதன் மதிப்பு ரூ.92 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதை அடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில்,
துபாயிலிருந்து வந்த ஒரு பயணி, இந்த பிளாஸ்க்கை தன்னிடம் கொடுத்து விமான நிலையத்திற்கு வெளியில் வருகை பகுதியில் நிற்கும் ஒருவரிடம் கொடுக்க சொன்னதால், எடுத்து வந்ததாக கூறினார். இதை அடுத்து துபாயிலிருந்து, தங்கக் கட்டிகளை கடத்தி வந்த அந்த பயணி யார்? என்று சுங்க அதிகாரிகள் விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே நேற்று இரவு துபாய் மற்றும் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.08 கோடி மதிப்புடைய, 1.65 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.