Rock Fort Times
Online News

கனிம வள கொள்ளையை தடுக்க முயன்று கொலை செய்யப்பட்ட ஜகபர் அலி குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு-நெல்லை முபாரக்…!

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் துணை அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று(25-01-2025) நடந்தது. கூட்டத்துக்கு அதன் மாநில தலைவர் பாத்திமா கனி தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதனை தடுத்து நிறுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று கனிம வளங்கள் அதிக அளவில் தமிழகத்தில் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனால், அரசுக்கு கோடிக்கணக்கான வருவாய் இழப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. மணல் குவாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதனை அள்ளும் பணி மற்றும் சேமிப்புக் கிடங்குகள் தனியாருக்கு அளிக்கப்படுவதால் மாபியா கும்பல் கட்டுப்பாட்டில் செல்கிறது. இதனால் அரசு நிர்ணயிக்கும் விலையை விட பத்து மடங்கு அதிகமாக மணல் விற்கப்படுகிறது. புதுக்கோட்டையில் மணல் மற்றும் கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்த குற்றவாளிகள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கொலை செய்யப்பட்ட ஜகபர் அலி குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்